குமரிநாடன் உரை: தொன்மையென அனைவரும் அறிந்த ஞயிறு, கோள்களுக்கு முதன்மையானது போல, அகரத்தை முதலாவதாகக் கொண்டுள்ளது தமிழ் (எழுத்தெல்லாம் என்பது தமிழைக் குறிக்கும்). அந்த அகரத்தைத் தமிழுக்கு அடையாளமாக்கி கொண்டாடுவோம். விளக்கம்: அ என்கிற எழுத்தே முதல். வலிமையாகச் சொல்லுகிறார். அடித்துச் சொல்லுகிறார் திருவள்ளுவர். கொண்டாட வேண்டியதும், தூக்கிப் பிடிக்க வேண்டியதும், அகரமே (தமிழே). ஒலியன் எழுத்து முறையாக, உலக மொழிகளில் தமிழ் மட்டுமே கூட்டி ஒலித்தால் சொல் வருகிற வகையில் எழுத்துக்களைக் கொண்டிருக்கிற நிலையில், ஒட்டுமொத்த ஒலிகளையும் ஒலியன் முறையில் எழுதிவிடக் கூடிய முதல் எழுத்துக்கள் என தமிழ்மொழி சுட்டுகிற முப்பது எழுத்துக்களுக்கும் முதல் எழுத்து 'அ'வே. எனவே அகரத்தைக் கொண்டாடுவோம் என்கிறார் திருவள்ளுவர். எவ்வாறெனில் உலகங்களுக்கெல்லாம் (கோள்களுக்கு எல்லாம்) தொடக்கமாக இருக்கிறது பகவன் என்கிற ஞாயிறு என்பது போல. இந்தக் குறளில் எழுத்துக்களில் அகரத்தின் முதன்மையை விளக்குவதற்கு வானியலை மேற்கோள் காட்டியதால், முதலெனப்படுவது இடமும் காலமும் என்று நிறுவிய தமிழ்முன்னோர், 'காலத்தை' வாழ்ந்த ப...